கவிக்கண்ணீர் அஞ்சலி

சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ. 91 - அவர்களுக்கு அஞ்சலி

இச்சிறு மண்ணிலே ஏதுமே இல்லையே

      ஏதுநான் செய்குவேனோ - இந்தப்

பச்சிளம் பாலகர் பசியினைப் போக்கிடப்

      பசுதேடி யோடுவேனோ!

அச்சிறு வண்டியாய் ஆகிய சிங்கையை

     அரங்கேற்ற ஏதுசெய்வேன் - என

நிச்சைய மற்றதோர் நிலைதந்த கண்ணீரால்

     நெறிநின்ற நாடாக்கினாய் !

 

தொலைதூர எண்ணமும் துவளாத நெஞ்சமும்

     தொடுவாவானும் உன்கையிலோ - இமய

மலைபோல உயர்வினை மண்ணிலே செய்தது

     மனங்கொண்ட தீயினாலோ!

சிலையொன்று கல்லினுள் சிங்கமாய் இருப்பதை

     செதுக்குமுன் அறிந்தமகனோ - நீ

இலையென் றறிததும் என்போ லறற்றிய

     எல்லோரும் உன்றன்சகனோ!

 

தூய்மையை, யாருக்கும் தோன்றாத பூமியைத்

     தூங்காமல் கனவுகண்டாய் - நல்ல

வாய்மையும் வலிமையும் வளமான வாழ்வதும்

     வாய்க்கவே நனவுகண்டாய்!

தாய்மையாய் நான்கினச் சேய்களில் வேற்றுமை

     காணாத நினைவுகொண்டாய் - இது

ஆய்மயி லோவென அகிலமே வியந்திட

       அழியாத தினவுகொண்டாய்!

 
 

அண்ணலே அரசரே அழகான சிங்கையின்

      அடிநாத ஊற்றுதானோ - உன்

மண்ணையும் மக்களையும் மனதுக்குள் ஏற்றிய

      மாமனித நாற்றுதானோ!

விண்ணையும் சிங்கைபோல் வெளிச்சமாய் ஆக்கிட

      விழைந்தானோ கூற்றுவன்தான் - உன்

கண்ணினை நிச்சையம் காத்திடு வாரென்ற

      கணக்கெனச் சாற்றுவேனோ!

 

சிங்கையின் தந்தையே எங்குநீ சென்றனை

      சிந்துகண் ணீரோடையை - நீ

கண்டிடில் உயிகொளும் காலனின் கணக்கையும்

      கட்டாயம் மாற்றுவாயே!

எந்தனின் மக்களுக் கேதேனும் இடரெனில்

      இறந்தாலும் வந்துசேர்வேன் – வாக்கு

சொன்னநீ இவ்வுலகு சோர்ந்திடும் வேளையில்

      சொல்லாமல் பிறந்துவருவாய்!

 

காசாங்காடு அமிர்தலிங்கம் 
Comments