தகவல் உதவி: இராமமூர்த்தி விஸ்வநாத் பிரபு மனமே மாறு மனமே! நீ கால் கழுவும் குளத்திலேயே வாய் கழுவுகிறாய்; இலையில் சோறு போட்டு ஈயைத் தூர ஓட்டி உணவுண்ண ஒத்துக்கொள்கிறாய்; எச்சில் மணல் இருக்கையில் இருந்தபடி திகட்டாது திரைப்படம் பார்க்கிறாய்; இன்னல்களின் இடுக்கில் உன்னை நீ ஒடுக்கிக் கொள்கிறாய், அவசியங்களை ஆடம்பரம் என்கிறாய்; ஆடம்பரங்களை அவசியம் என்கிறாய்! கிட்டாதென எண்ணி வெட்டென மறக்கிறாய்; அடிவாரத்திலேயே ஆனந்தம் கொள்கிறாய்; உச்சி பற்றி யோசிப்பதில்லை; பொய் வாழ்விலேயே புளகாங்கிதம் கொள்கிறாய்; உண்மை என்னவென உணர்வதே இல்லை; கட்டாயத்தின் பேரிலேயே கால் நகர்த்துகிறாய்; கலாச்சாரக் கம்பளிக்குள் கதகதப்பு உய்க்கிறாய்; மனமே! சாணக்கியன் நீ, ஆனால் சகித்துச் சகித்துச் சாமானியனாகிறாய்! கோமான் நீ குனிந்து குனிந்து கோமாளியாகிறாய்! உன் மன அமைவு மாறுவதெப்போது? புதியன செய்ய இலக்கணம் உடைத்தலே இலக்கணம் என்பதை உணர்வதெப்போது? மீன் துண்டுகள் இட்டு சாம்பார் சமைத்துப்பார்! உனக்கு தக்கப்படி உன் சூழலை மாற்ற முனை! நீயாக உழைக்கத் தொடங்குவாய்; என் பணப்பெட்டி தானாக தழைக்கத் தொடங்கும்! |
கவிதை > கவிஞர். அமிர்தலிங்கம் >